பைரவ வடிவம்-25

 பைரவ வடிவம்-25


சைவசமயத்தின் அகப்புறச்சமயங்களாய் கூறப்படும் ஆறு பிரிவுகள்:

1.பாசுபதம்

2.மாவிரதம்

3.காளாமுகம்(காளம்)

4.வாமம்(சாக்தேயம்)

5.பைரவம்(வைரவம்)

6.ஐக்கியவாத சைவம்


இதில் பைரவரே பரம்பொருள், அவரடியில் சேருவதே வீடுபேறு கொடுக்கும் என்பது பைரவசமய கோட்பாடு! பைரவகடவுளிலிருந்து எட்டுத்தலைகள் தோன்றி உயிர்களுக்கு பந்தமும், வீடுபேறும் அளிக்கும் என்பது பைரவசமயநெறி. போகத்தால் வரும் மார்க்கமே முக்தியை அளிக்கும் என்பது இவர்கள் கொள்கை. நரபலியிடுதல், மண்டையோட்டில் உணவருந்துதல் கபாலத்தையேந்தி பிச்சையெடுத்தல் ஆகிய பழக்கமும் உண்டு. சிறுதொண்டரிம் பிள்ளைக்கறி கேட்டுவந்த இறைவனின் கோலம் "வைராகி" கோலமே என்பர்.

செஞ்சடையும், நீலவடிவமும், திருவடிகளில் சிலம்பும், மார்பில் கபாலமாலையும், கைகளில் சூலம், மழு, பாசம், உடுக்கை ஏந்தி கோரப்பற்களுடன் சீற்றம் கொண்டவராய் இவரது தோற்றம் காணப்படும்! ஊழிகாலத்தில் தாண்டவமாடி யாவற்றையும் அழிப்பார், நான்மறைகளும் நாய் வடிவில் இவர் பின்னே இருக்கும். நாய் வாகனம் இல்லாமலும் இருப்பார், மேலும் யானை, குதிரை, எருது, அண்ணம், கழுகு, மயில் போன்றவையும் இவரது வாகனங்களாகும்.


பைரவர் தமது பிரதிமையாய் எட்டு வடிவங்களை படைத்தார் என தந்திரசாரா எனும் நூல் கூறுகிறது அவை,


1.சிதாங்கர் 2.உன்மத்தர் 3.ரூரு 4.காபாலர் 5.சண்டர் 6.குரோதர் 7.பீடரர் 8.சங்கராணர்


இவர்களே மூல பைரவர் இவர்களும் எட்டு எட்டாய் பிரிந்து 64 வடிவம் மேற்கொண்டதாய் ஆகமம் கூறுகிறது.


இவர் மூன்று விதமான குணங்களில் தோன்றியதாய் சில்பரத்னம் கூறுகிறது.


1.சாத்வீக வவடிம்(நாற்கரம்)

2.ராட்ச வடிவம்(ஆறுகரம்)

3.தாமஸ வடிவம் (எண்கரம்)


சில்பரத்தினம் கூறுவதற்கு விதிவிலக்காய் பாண்டியதேச கோவில் ஒன்றில் (உசிலம்பட்டி அருகே தெப்பம்பட்டி பொக்கிஷநாதர் கோவில்) இருகரங்களுடன் காணப்படுகிறார்.


பொதுவாய் நாம் வணங்கும் இறைவழிபாடு 1.திருவுருவம் 2.எந்திரம்(சக்கரம்) 3.தந்திரம் என மூன்றுவகைப்படும்.


திருவுருவ வழிபாடு உருவம், அருவம் என இருவகைப்படும். ஆடல்வல்லான், கங்காதரர் இன்னும் சில வடிவங்கள் உருவ வழிபாடாகவும், லிங்கத்திருமேனி முதலானவை அருவ வழிபாடாகவும் இருக்கும். அருவ, உருவ வழிபாடுகளுடன் எந்திரத்தை பிரதிஷ்டையும் செய்யப்படுகிறது, இவற்றுடன் மந்திரமும் சேர்த்து வழிபடுதலே சைவமரபு. திருமூலர் இதனை தம் திருமந்திரத்தில்,


"கொண்டஇம் மந்திரங் கூத்தன் எழுத்ததாய்ப்

பண்டையுள் நாவிற் பகையற விண்டபின்

மன்றுள் நிறைந்த மணிவிளக் காயிடும்

இன்றும் இதயத் தெழுந்து நமவெனே"


மேற்கண்டவாறு கூறுகிறார்.

மேலும் பைரவ வழிபாட்டில் உள்ள எந்திர வழிபாடு பற்றி ஆறுமந்திரங்களில் கூறுகிறார் அவை,


"அறிந்த பிரதமையோ டாறும் அறிந்து

அறிந்த அச்சத்தமி மேலவை குற்ற

அறிந்தவை ஒன்றுவிட் டொன்றுபத் தாக

அறிந்த வலமது வாக நடத்தே"


என வைரவசக்கரத்தின் அமைப்பை பற்றி கூறுகிறார். 


 பைரவ எந்திரம்:

 

அம்மாவாசை, பௌர்ணமி என இருபக்கத்திலும் பதினைந்து திதிகளையும் ஆறுஆறாய் அமைத்து சக்கரத்தை அமைக்க வேண்டும் எனவும், மந்திர எழுத்துகளை முப்பது அறைகளில் அமைக்க வேண்டும்.நடுவில் உள்ள ஆறு இடங்கள் வெற்றிடமாய் நிற்கும். அவற்றின் நடுவே "ஓம் பவ" எனும் மந்திரத்தையும், அவற்றின் கீழ்தொடங்கி "பைரவ நம" எனும் மந்திரத்தையும் ஆறு அறைகளில் எழுத சக்கரம் முடிவுறும். இவ்வழிபாட்டை அமாவாசை தொடங்கி பௌர்ணமி வரை வழிநாடு செய்ய வேண்டும்.  எக்காலத்திலும் இவர் உயிர்களை காப்பதால் "காலபைரவர்" எனவும் பெயர் உண்டு.


நரசிங்கபெருமாள், திரிவிக்ரமூர்த்தி இவர்களின் தோலினை ஆடையாய் அணிந்திருப்பார்.


வடநாட்டில் "வைரவி" வழிபாடு காணப்படுகிறது. தென்னகத்தில் இவ்வழிபாடு இருப்பதாய் தெரியவில்லை, எனினும் திருமூலர் ஐம்பது பாடல்களை அந்தாதி வடிவில் 'வைரவி' குறித்து பாடுகிறார். 

அவற்றுள் சில:


"பன்னிரண்டு ஆம் கலை ஆதி வயிரவி

தன்னில் அகாரமும் மாயையும் கற்பித்துப்

பன்னிரண்டு ஆதியோடு அந்தம் பதினாலும்

சொல்நிலை சோடசம் அந்தம் என்று ஓதிடே".


 "அந்தம் பதினாலும் அதுவே வயிரவி

முந்து நடுவும் முடிவும் முதலாகச்

சிந்தைக் கமலத்து எழுகின்ற மாசத்தி

அந்தமும் ஆதியும் ஆகி நின்றாளே"


புராணங்களில் பைரவர்:


அந்தகன் எனும் அசுரன் பலகாலம் தவமியற்றி அரி, அயன் முதலிய அமரர் எவரேனும் தன்னை கொல்ல இயலாதவாறு சிவனிடம் வரம் பெற்றான், வரம்பெற்ற ஆணவத்தில் ஏனைய அசுரரைபோல இவனும் உலகோரை துன்புறுத்தினான்.தன்னை எதிர்த்து போரிட்ட தேவர்களை வென்ற ஆணவத்தில் ஆண்களில் அரிமா போன்றவன் நான் ஒருவனே! ஆகவே நீங்கள் அனைவரும் பெண்களைபோல் கண்ணுக்கு மைதீட்டி,உடையும் அணிகலன்களும் அணிந்திருங்கள், என்னை எதிர்க்கும் ஆண்மகன் ஒருங்கால் தோன்றினால் அவனையும் கொன்றழிப்பேன் என சூளுரைத்தான். அவமானத்தால் கூனிக்குறுகிய தேவர்கள் ஈசனிடம் முறையிட, அவரோ தேவர்கள் முதலியோரை மேருமலையில் தங்கவைத்து, தம்மால் தோற்றுவிக்கப்பட்ட பைரவமூர்த்தியை  ஏவி அந்தகாசுரனை அழிக்க ஆணையிட்டார். பெரும்போரில் அந்தகாசுரனின் டை அழிந்தது. அசுரகுருவான சுக்ராச்சாரியார் அமுதசஞ்சீவினி மந்திரால் படையை மீண்டும் உயிர்ப்பித்தார். கோபம் கொண்ட ஈசன் சுக்ரனை விழுங்க, மறுகணம் பைரவர் அந்தகாசுர படையை அழித்தார்.தம் திரிசூலத்தார் அந்தகனை குத்தி மேலே தூக்கினார். உயிருக்கு அஞ்சி அந்தகன் அபயமடைந்தான், ஈசனிடம் தஞ்சமடைந்து பூதகனங்களுக்கு தலைவனாகும் வரத்தையும் பெற்றான்.

இருகர பைரவர் (தெப்பம் பட்டி)

நான்கரம் (காமரச வள்ளி)


ஆருகரம் (புல் வயல்)

எண்கரம்


Comments

Post a Comment

Popular posts from this blog

அடிமுடிகாணா அண்ணல்-16

சதாசிவ வடிவம்-11