முப்புரம் எரித்த அண்ணல்:02

 முப்புரம் எரித்த அண்ணல்:02


தாரகாட்சன், கமலாட்சன், வித்யுன்மாலி எனும் அரக்கர்கள் பொன், வெள்ளி, இரும்பு ஆகிய உலோகங்களால் கோட்டைகள் அமைத்து உலகோரை துன்புறுத்தி வந்தனர். கடும் தொல்லையடைந்த தேவர்கள் ஈசனிடம் இதுகுறித்து முறையிட, முப்புரங்களாகிய அக்கோட்டைகளை அழிக்க ஈசன் முனைந்தார். ஒவ்வொரு கடவுளரும் இச்செயலில் பங்குகொள்ள எண்ணி, தம் பங்களிப்புகளை அளித்தனர். அனைத்து கடவுளரின் உருவாய் ஒருதேரினை வடிவமைத்தனர். சூரியசந்திரர் சக்கரமாயினர், நான்கு வேதங்கள் குதிரைகளானது, நான்முகன் தேரோட்டியானார்.மேருமலை வில்லானது, வாசுகி பாம்பு நாண் ஆனது,  திருமால் அம்பானார். ஒவ்வொரு கடவுளரும் தாமே இப்போர் நடைபெற முக்கிய காரணம் என சிறிது கர்வமடைந்தனர். ஈசன் தேரில் ஏறியதும் ஒரு சிரிப்பு சிரிக்க, அக்கனமே முப்புரமும் எரிந்து நாசமானது. அக்கோலமே "திரிபுராந்தகர்" கோலம் எனப்படுகிறது.


திரிபுரம் எரியத் தேவர் வேண்ட

 எரிமுகப் பேர்அம்பு ஏவல் கேட்ப

உமையவள் ஒருதிறன் ஆக ஓங்கிய

இமையவன் ஆடிய கொடுகொட்டி ஆடலும்,

தேர்முன் நின்ற திசைமுகன் காண


என்ற சிலப்பதிகார பாடலும், 


ஆதி அந்தணன் அறிந்து பரி கொளுவ,

வேத மா பூண் வையத் தேர் ஊர்ந்து,

நாகம் நாணா, மலை வில்லாக,

மூவகை ஆர் எயில் ஓர் அழல்-அம்பின் முளிய, மாதிரம் அழல, எய்து


என்ற பரிபாடல் பாடல் வழியாகவும் திரிபுராந்தக வடிவத்தின் தொன்மையை நாம் அறியலாம்.


போரிடையன்று மூன்று மதிலெய்த ஞான்று'

புகழ்வானுளோர்கள் புணரும் தேரிடை

நின்ற வெந்தப்பெருமான்  (பதி.222. பா.3.)

என்ற திருமுறை பாடலில் சம்பந்தரும்


"புரங்கள் மூன்றெரித்த கையனே"

"திரிபுரம் செற்ற வில்லி"


என மணிவாசகரும் இவ்வடிவு இறைவன் குறித்து பாடுகின்றனர்.


ஆகமங்களில் திரிபுராந்தகர்:


இக்கோலத்தில் இறைவன் வலதுகாலை சிறிது முன்னோக்கியும்,இடதுகால் சற்று பின்னே அம்பெய்ய தயார்நிலையிலும் இருப்பார். பெரும்பாலும் இவர் நான்கு கரங்களிலேயே அமைக்கபடுவார்.வலதுமுன்கரம் அம்பினை பற்றியும், இடக்கரம் வில்லைப்பற்றியும், பின் இருக்கரங்களிலும், மான், மழுவை ஏந்தியிருப்பார். சில சிற்பங்களில் இரண்டு கரங்களை ஏந்தியிருப்பார். அச்சிற்பங்களில் வில்லையும் அம்பையும் மட்டுமே ஏந்தியிருப்பார்.


தஞ்சாவூர் பெரியகோவில் சோழர்கால சாந்தார அறை திரிபுராந்தகர் ஓவியம் மிகவும் பிரசித்தி பெற்றது.





Comments

  1. Beutiful and very rare worthi footage
    Om Namasivaya 🙏🙏

    ReplyDelete
  2. The above comment by Ramachandran Swaminathan Adayar Chennai.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

அடிமுடிகாணா அண்ணல்-16

பைரவ வடிவம்-25

சதாசிவ வடிவம்-11