இராவண அனுக்கிரக மூர்த்தி: 04

 இராவண அனுக்கிரக மூர்த்தி: 04


பத்துதலைகள், இருபது கரங்கள் உடைய பராக்கிரமன், இலங்கை வேந்தன் இராவணன். சில தீயகுனங்கள் இயல்பில் பெற்றிருப்பினும் சிறந்த சிவபக்தன். இராமயணத்தின் தாக்கம் காரணமாய், இன்றும் மக்கள் மனதில் அழியாப்புகழைப் பெற்று உள்ளார். கடற்படை, தேர்ப்படை கொண்டவன். ஒருமுறை இவர் தம்தேரில் கைலாயமலை வழியே தேரில் செல்ல நேர்ந்தது, அப்போது கைலாயமலை அவன் தொடர்ந்து செல்ல தடையாய் உள்ளது என கருதி, இறைவன் வீற்றிருப்பதையும் மதியாது, தன் புஜபலத்தால் கயிலைமலையை தகர்க்க நினைத்து மலையை குலுக்கினான். மலையின் திடீர் குலுங்களில் அதிர்ந்த உமை ஈசனின் கரத்தை பற்ற,தம் ஒற்றை கட்டைவிரலால் ஊன்றி அழுத்த இராவணின் உடல் அதில் நெருக்குன்டு சிக்கி ரத்தம் வழிந்தது. அப்போதுதான் தன் ஆணவச்செருக்கு இராவணனுக்கு உரைத்தது, தன் பத்துதலைகளில் ஒருதலையை கொய்து, ஒரு கரத்தையும் வெட்டி, நரம்பினை அதில் கோர்த்து ஒரு வீணையை செய்து, செங்குருதி ஒழுக, மனம் உருகி பாடல் பாடினான், நெகிழ்ந்துபோன ஈசன் தேர், வாள், ஆகியவை அளித்து அருள்புரிந்து வழியனுப்பி வைத்தார். இக்கோலமே "இராவண அனுக்ரஹ மூர்த்தி" என அழைக்கப்படுகிறது.


"இமையவில் வாங்கிய ஈர்ஞ்சடை யந்தணன் 

உமை யமர்ந் துயர்மலை இருந்தனனாக

ஐயிரு தலையின் அரக்கர் கோமான்

தொடிப்பொலி தடக்கையிற் கீழ்புகுத் தம்மலை 

எடுக்கல் செல்லாது உழப்பவன் போல"


இமயமலையிடத்துப் பிறந்த மூங்கிலாகிய வில்லை வளைத்தவனும், ஈரத்தை உடைத்தாகிய சடையினை உடையவனும் ஆகிய இறைவன் இறைவியோடு, உயர்ந்த கயிலைமலையில் இருந்தவரை,  அரக்கர்க்கு அரசனாகிய பத்துத் தலையை உடைய இராவணன் மலையை பெயர்ப்பதற்குக் கையைக் கீழே செருகித் தொடிப்பொலிவு பெற்ற அத்தடக்கையினாலே அம்மலையை எடுக்க இயலாது வருந்திய நிலைபோல.....


என, இங்குச் சிவனைப் பற்றிய குறிப்பும் இராவணன் கயிலாய மலையைத் தூக்க முயன்று முடியாமற் போனது குறித்து கலித்தொகை பாடல் ஒன்றில் இடம்பெற்றுள்ளது. 

"இராவணனை ஈடழிய எழில்கொள் விரலால் பெரியவரை ஊன்றியருள் செய்த சிவன்"

என சம்பந்தரும்,  

"இலங்கையர் கோமானைத் திருவிரலால் உதகரணம் செய்துகந்த சிவமூர்த்தி" என நாவுக்கரயரும் கூறியுள்ளார்.






Comments

Popular posts from this blog

அடிமுடிகாணா அண்ணல்-16

பைரவ வடிவம்-25

சதாசிவ வடிவம்-11