வீணையேந்திய தென்முகக் கடவுள்:05

 வீணையேந்திய தென்முகக் கடவுள்:05


திருக்கயிலாய மலையில் ஆல்அமர்செல்வன் கோலத்தில் ஈசன் அமர்ந்திருக்கும்பொழுது, யாழிசையில் வல்லவரான தும்புரு, நாரதர், சுகுரு முதலியோர் கைலாயம் சென்று, நந்தியம்பெருமானின் அனுமதிபெற்று, ஈசனின் திருவடியை பணிந்து தொழுதனர். சிவனார் அருட்பார்வையாய் அவர்களை நோக்கி பார்க்க, தமது கோரிக்கையை அவர்கள் முன் வைத்தனர். "தங்கள் பெருமையை பறைசாற்றும் சாமவேதத்தினை வீணையில் இசைத்து பாடவும், வாசிக்கவும் தெளிவுபெறவுமே நாங்கள் வந்தோம்,எப்போதும் சிவத்தொண்டில் இருக்கும் எமக்கு, இது இன்றியமையாத பணியாகும்! எனவே அருள்கூர்ந்து தாங்கள், வீணை இசையின் இலக்கணங்களை கற்றுத்தருமாறு கேட்டுக்கொள்கிறோம்" என கூறி முடித்தனர். வீணையின் இலக்கணங்கள் குறித்து ஈசனாரும் விரிவாக அவர்களுக்கு விளக்கி  முடித்தார்.


யாழும் வீணையும்:


வில்லாளி ஒருவன், தனது வில்லினின் நாணினை இழுத்து கட்டும்பொழுது, ஒரு இனிமையான ஒலி ஏற்பட்டது! அந்த ஒலியின் இனிமையில் மயங்கிய வில்லாளி, சிறிதும் பெரிதுமான வெவ்வேறு வகையான வில்லினை எடுத்து நாணை பூட்டி, அந்த ஒலியை விரும்பி கேட்டான். அந்த ஒலியின் இனிமையை அடிப்படையாய் வைத்தே யாழ் தோன்றியது! அந்த யாழின் முதிர்ந்த வடிவே வீணையாயிற்று!  யாழ் பேரியாழ், மகரயாழ், சகோடயாழ், செங்கோட்டியாழ் என வகைபடுத்தப்பட்டது.



"பேரியாழ் பின்னும் மகரம் சகோடயாழ்

சீர்பொலியும் செங்கோடு செப்பினார் - தார் பொலிந்து 

மன்னும் திருமார்ப வண் கூடற் கோமானே

பின்னுமுளவோ பிற”


என்ற பாசுரபாடல் வாயிலாக அறியலாம்.


"ஒன்றுமிருபதும் ஒன்பதும்பத்துடனே

நின்ற பதினான்கும், பின்னேழும் - குன்றாத 

நால்வகை யாழிற்கு நன்னரம்பு சொன் முறையே

மேல் வகுத்த நூலோர் விதி’'


என்ற பாசுரப்பாடல்படி பேரியாழுக்கு இருபத்தியொன்றும், மகரயாழுக்கு பத்தொன்பதும், சகோடயாழுக்கு பதினான்கும் செங்கோட்டியாழுக்கு ஏழும் நரம்புகளாகக் கொண்டு வழங்கி வந்துள்ளதை அறியலாம்.


தட்சினாமூர்த்தி கையில் இருப்பது வீணை. நாரதர் கையில் ஏந்தியிருப்பது மகதிவீணை. கலைமகள் கரத்தில் உள்ளது  கச்சபீயாகும்.


"பெருங்கடல் மூடிப் பிரளயம் கொண்டு

பிரம்மனும் போய்

வருங்கடல் மீளநின்று எம்இறைநல்

வீணை வாசிக்குமே"


என நாவுக்கரசர் இவ்விறைஉருவை பாடுகிறார்.


வேயுறு தோளிபங்கன் விடமுண்ட கண்டன் 

மிகநல்ல வீணை தடவி

மாசறு திங்கள்கங்கை முடிமே லணிந்தென் 

உளமே புகுந்த அதனால்

ஞாயிறு திங்கள்செவ்வாய் புதன்வியாழம் வெள்ளி 

சனிபாம்பி ரண்டு முடனே

ஆசறு நல்லநல்ல அவைநல்ல நல்ல 

அடியா ரவர்க்கு மிகவே..


மாசில் வீணையும் மாலை மதியமும் 

வீசு தென்றலும் வீங்கிள வேனிலும் 

மூசு வண்டறை பொய்கையும் போன்றதே 

ஈசன் எந்தை இணையடி நீழலே..


வெந்தார்வெண் பொடிப்பூசி வெள்ளை மாலை 

விரிசடைமேற் றாஞ்சூடி வீணை யேந்திக்

கந்தாரந் தாமுரலாப் போகா நிற்கக்

கறைசேர் மணிமிடாற்றீ ரூரே தென்றேன்

நொந்தார்போல் வந்தென தில்லே புக்கு

நுடங்கே ரிடைமடவாய் நம்மூர் கேட்கில்

அந்தா மரைமலர்மேல் அளிவண் டியாழ்செய் 

ஆமாத்தூர் என்றடிகள் போயினாரே


போன்ற திருமுறை பாடல் வாயிலாக வீணையேந்திய ஈசரின் தோற்றத்தை அறியலாம்.


ஆகமத்தில் வீணாதாரர்:


வீணையை வைத்துக்கொள்ள வாகாக, முன்இடக்கரத்தை உயர்த்தி முன்வலக்கரத்தை தாழ்த்தி வைத்திருப்பார். இவரை "கேய தெட்சினாமூர்த்தி" என உத்ரகாமீக ஆகமம் கூறுகிறது. கேயம் என்பதற்கு பாடுதல் அல்லது இசையமைத்தல் என பொருள்.பின்வலக்கரம் வீணையை மீட்டும் அமைப்பில் இருக்கும்.புன்னகை பூக்கும் முகவடிவமைப்பில் இச்சிலை வடிக்கப்பட்டிருக்கும்.நின்ற கோலத்திலோ, அமர்ந்த கோலத்திலோ இவர் அமைக்கப்படுவார். தன்முடியினாலேயே அமைக்கப்பட்ட சடாபாரம், சடாமகுடம் அணிந்து காட்டப்படுவார். இருகாதிலும் குண்டலம் அணிந்திருப்பார். இவரைச்சுற்றிலும் வித்யாதரர், குழகர், பல்வேறு விலங்கினங்கள்,  சித்தர், கிண்ணரர் இசையில் மயங்கியவாரு இச்சிலைகள் அழகுற வடிக்கப்பட்டிருக்கும்








Comments

  1. இந்த வலைப்பூவினை இன்றுதான் காணும் வாய்ப்பினைப் பெற்றேன். சிவ மூர்த்தங்களுக்காக தனியாக ஒரு தொடர்.பாராட்டத்தக்கவேண்டிய முயற்சி. வாழ்த்துகள்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

அடிமுடிகாணா அண்ணல்-16

பைரவ வடிவம்-25

சதாசிவ வடிவம்-11