கங்காதரர்:07

 கங்காதரர்:07


கைலாய மலையில் ஈசன் அமர்ந்திருக்கும்போது, விளையாட்டாய் உமையம்மை ஈசனின் கண்களை மூட, அக்கனமே உலகம் இருண்டது! திடீரென இருள் சூழ்ந்ததால் சகல உலகமும், உயிர்களும் திணறின. நிலைமையை உணர்ந்த ஈசனார், தமது மூன்றாம் கண்ணான நெற்றிக்கண்ணை திறந்தார். உலகம் மீண்டும் புத்துயிர் பெற்றது. சகலபுவனங்களும் மீண்டும் பழைய நிலைமையை எய்தியது. விபரீதத்தை அறிந்த உமையம்மை தம் கைகளை அகற்றினாள். அப்போது பதட்டம் காரணமாய் வியர்வை சுரந்தது. அந்த வியர்வையே கங்கையாக பெரும் பிரவாகமாய் தோன்றி உலகெங்கும் ஓடி உலகத்தாருக்கு பல இன்னல்களை தந்தது. உலகஉயிர்களின் கலக்கத்தை உணர்ந்த ஈசன், கங்கையின் பெரும் பிரவாகத்தை தம் கூந்தலின், ஒருமுடியின் நுணியில் தரித்தார். உலக உயிர்களை காக்கும் பொருட்டு, தம்சடையில் கங்கையை அணிந்ததால், ஈசனாரின் இந்த வடிவத்திற்கு "கங்காதர மூர்த்தி" எனப்பெயர்.


"இமையவில் வாங்கிய ஈர்ஞ்சடை அந்தணன் 

உமைஅமர்ந்து உயர்மலை இருந்தனனாக"


என இக்கோலத்தை கலித்தொகை கூறுகிறது! 


"கற்றானைக் கங்கைவார் சடையான் றன்னைக்" 

"கங்கை நாயகன்" என இக்கோலம் குறித்து திருமுறைகளில் பயின்று வருகிறது! 


தம் இடக்காலை வளைத்து, வலதுகாலை நிலத்தில் ஊன்றி நிற்கும் திருவுருவாய், பின்வலக்கை மழுவையும்,  முன்வலக்கை தன்கையில் கங்கையை சடையில் சார்த்துவதாய் ஆரம்பகால பல்லவர்கால கங்காதாரர் சிற்பம்  வடிக்கப்பட்டிருக்கும். அதன்பின்னர் வரும் காலங்களில் சிற்பவமைதியில் சில மாற்றங்கள் ஏற்படுகிறது!  உமையம்மை, கங்கையை தலையில் சூடியதால், ஈசனுடன் ஏற்பட்ட ஊடல் காரணமாய், உமையம்மையை சமாதானப்படுத்த தம் வலக்கையால் அவர் தாடையை வருடி கொஞ்சுவதுபோல் அதற்கேற்ப உருவமைதியுடன் சிற்பம் அமைக்கப்படுகிறது. திருச்சிராப்பள்ளி மாவட்ட மலைக்கோட்டை மேல்குடைவரையில் மகேந்திரவர்மன் கால எழிலார்ந்த கங்காதரர் சிற்பம் ஒன்றுள்ளது. தமிழகத்தில் கிடைக்கும் முதல் 'கங்காதரர்' உருவம் இதுவேயாகும்.






Comments

  1. திருமீயச்சூரில் உள்ள (முதல் இரு படங்கள்) இறைவனையும், இறைவியையும் பல முறை கண்டுள்ளேன்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

அடிமுடிகாணா அண்ணல்-16

பைரவ வடிவம்-25

சதாசிவ வடிவம்-11