சர்ப்பங்களை அடக்கிய வடிவம்:09

 சர்ப்பங்களை அடக்கிய வடிவம்:09


ஈசனின் இருவகை காத்தலில் மறக்கருணை எனும் துன்பம் நல்குகையில் காக்கும் செயலை குறிக்கும் நடனம் "புஜங்கத்திராச நடனம்" என அழைக்கப்டுகிறது. தென்பாண்டி நாட்டு திருப்பத்தூர் தலத்தில் இந்நடன நிகழ்வு நடைபெற்றதாய் புராணங்கள் கூறுகிறது.


தாருகாவன ரிஷிகளும், அவர்தம் மனைவியரும் தம் தவவலிமையே ஞாலத்தில் சிறந்ததென கருதி சிவத்தை மறந்தனர். அம்முனிகளின் கர்வத்தை அடக்க, ஈசன் பிச்சைதேவர் உருகொண்டும் ,திருமால் மோகினி உருகொண்டும் தாருகாவனம் வந்தனர். இருவரின் தோற்றத்தை கண்டு,ரிஷிகளும் அவர் மனைவியரும் தம் மனவலிமையை இழந்து பொய்யான தோற்றத்தின்பால் ஆசைகொண்டனர். இறுதியில் மெய்ம்மை உணர்ந்து ஈசனை அழிக்க "அபிசார வேள்வி" செய்தனர். வேள்வியில் தோன்றிய புலி, மழு, மான், சிரோமாலை, பாதச்சிலம்பு ஆகியவற்றை தம் ஆயுதமாய் ஈசன் ஏந்திக்கொண்டார். மேலும் யாககுண்டத்திலிருந்து கொடிய விஷமுடைய நாகங்கள் தோன்றியது. அவையும் ஈசனை அழிக்க ஏவப்பட்டது. அவை அதிவேகமாய் காளாஸ்திரி-யமன்-யமதூதன்-காளி எனும் தனது நான்கு விஷப்பற்களில் விஷத்தை கக்கிக்கொண்டு ஈசனைநோக்கி வந்தடைந்தது. முன்னாளில் கருடனுக்கு அஞ்சிய பாம்புகளுக்கு தஞ்சம் அளித்து, தம் உடலிலேயே தங்க அருள்புரிந்தார். தன்னை கொல்லத்துடிக்கும் இந்த பாம்புகளுக்கும் அருள்புரிந்து, தம் உடலெங்கும் பாம்புகளையே அணிகலன்களாய் கொண்டு, அவ்வினங்களுக்கு அருள்புரியும் வண்ணம் "புஜங்கத்திராசம்" எனும் நடனம் புரிந்தார் ஆடலரசரான ஈசர்.

இதுவே "சர்ப்பங்களை அடக்கிய வடிவம்" எனப்படுகிறது.


"காம்பாடு தோளுமையாள் காண நட்டங்

கலந்தாடல் புரிந்தவன்காண் கையில் வெய்ய பாம்பாட..."


எனும் திருப்புத்தூர் திருத்தாண்டகம், ஆடலரசர் இக்கோலத்தை ஏற்று நடனமாடியதாய் கூறுகிறது.


"வெங்கண் வாளர வாட்டி வெருட்டுவர்

அங்க ணாரடி யார்க்கருள் நல்குவர்

செங்கண் மாலயன் தேடற் கரியவர்

பைங்க ணேற்றினர் பாலைத் துறையரே"


என்ற திருப்பாலைத்துறை திருப்பதிகமும் இறைவன் ஆடிய புஜங்கத்திராசம் எனும் இந்நடனகோலத்தினை குறிப்பிடுகிறது.


படத்திலுள்ள ஆடலரசர் சிற்பம், தமிழக சிற்ப வரலாற்றில் அறியப்படும் முதல் நடராசர் சிற்பம் என்பது குறிப்பிடத்தக்கது.




Comments

  1. சர்ப்பங்களை அடக்கிய வடிவம்..இப்போதுதான் கேள்விப்படுகிறேன்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

அடிமுடிகாணா அண்ணல்-16

பைரவ வடிவம்-25

சதாசிவ வடிவம்-11