இலகுளேச மூர்த்தி-12

இலகுளேச மூர்த்தி-12


"அடுத்தங்கு உடனாம் பரம்பொருளை

யன்றே விரவவொட்டாமல்

தடுத்து முக்கூற்றுயி ருணர்வைத்

தகையுமவிச்சை முழுதிரிய

மடுத்த கருணைத் திருநோக்கின்

மாணாக்கருக்குப் பொருளுரைப்ப

எடுத்த கர.தான் வீற்றிருக்கும்

இலகுளேசன் திருவுருவம்

-காஞ்சிப்புராணம்


ஒவ்வொரு புவனத்திற்கும் ஒவ்வொரு மூர்த்தியாய் எழுந்தருளியிருந்து, அங்குள்ள உயிரினங்களின் கர்மத்திற்கு ஏற்றவாறு திருவருள் புரியும் சிவவடிவே "இலகுளேசர்" வடிவம் என புராணங்கள் கூறுகிறது!


இறந்தவர் நினைவாக கல்லெழுப்பி வணங்கப்படும் மரபு பெருங்கற்காலம் முதலே நம் தமிழகத்தில் கிடைக்கிறது. சங்க இலக்கியங்களும் இதற்கு சான்று பகிர்கிறது. அவ்வழக்கமே மெல்ல மருவி பள்ளிப்படை கோவில்களாக உருமாறுகிறது. அவ்வகையில் தமிழகத்தில் முதல் பள்ளிப்படையாக 8 ம் நூற்றாண்டைச்சேர்ந்த கிண்ணிமங்கலம் கல்வெட்டில் முதன்முதலாக "பள்ளிப்படை" எனும் சொல் கிடைக்கிறது. இந்த பள்ளிப்படை மரபு சைவ மதம் சார்ந்த ஒன்றாகவே இருந்துவருகிறது!  கி.பி 2ம் நூற்றாண்டளவில் வட இந்தியாவில் பிரபலமாயிருந்த காபாளிகம், காளாமுகம், பாசுபதம் ஆகிய சைவம் சார்ந்த நெறிகள் கி.பி 6 ம் நூற்றாண்டளவில் தமிழகத்தில் மெல்ல பரவுகிறது! இவற்றுள் பாசுபதம் கி.பி2 ம் நூற்றாண்டில் குஜராத் மாநிலம் காயாரோஹனம் பகுதியை சேர்ந்த லகுளீசர் என்பவரால் தோற்றுவிக்கப்பட்டது. இவரை சிவபெருமானின் 28 ம் அவதாரமாய் புராணங்கள் போற்றுகிறது! இவரது தத்துவமே "பாசுபத சைவம்" என பெயர் பெற்றது. இவர் எழுதியது பாசுபத சூத்திரம் என புகழ்பெற்றது.

இறைவன்=பதி உயிர்=பசு, பசுவாகிய உயிர், பாசுபத விரதத்தின் மூலம் அகந்தையை,உலகபந்தங்களை விட்டொழித்தால், பதியாகிய இறைநிலையான யோகநிலையை அடைந்துவிடுவர் என லிங்கபுராணம் கூறுகிறது. இந்த நெறியையே பாசுபதமும் கூறுகிறது!அவ்வகையில் உலக பந்தங்களிலிருந்து விடுபடும் யோகியர்களை, குருமார்களை சிவனாய் பாவித்து வழிபட்டனர் பாசுபத சைவத்தினர்.  அவ்வாறு நெறியை பின்பற்றியவர்களுக்கு அவர்கள் இறந்தபின் அவர்களது சீடர்கள்  மரியாதை செய்து வணங்கினர். அதற்கு "குரு ஆயதனம்" எனப்பெயர்

 

குருஆயதனம்:


உலகபந்தங்களிலிருந்து விடுபட்டு இறந்த தம் குருமார்கள் நினைவாக அவர்கள் சமாதியின் மேலே லிங்கம் அமைத்து வணங்கினர். குஜராத் கார்வான் நகரில் உள்ள இரு லிங்கங்களில் குருமார்கள் இருவர் உருவங்கள் பதிக்கப்பட்டுள்ளது.

மதுராவில் உள்ள கி.பி 4 ம் நூற்றாண்டை சேர்ந்த தூண் கல்வெட்டு ஒன்று சந்திரகுப்த முனியன் ஆட்சியில் உதிட்டாச்சாரியர் எனும் குருமார், அவரது குருவான "உபமிதா", "கபிலா" எனும் இருவருக்கு லிங்கம் அமைத்து அதில் அவர்கள் உருவம் பொறித்து வணங்கியது தெரியவருகிறது. இவ்வாறு உலகபந்தம் விடுத்த துறவியரான குருமாரை சிவனாக பாவித்து வணங்குவது குருஆயதனம் எனப்படுகிறது.


ஆரம்பத்தில் குருஆயதனமாய் இருந்த பாசுபதம், பின்னாளில் தமிழகத்தில் ஊடுருவுகையில் காலமாற்றத்திற்கேற்ப சில விதிகள் தளர்த்தப்பட்டு  சக நெறிகளான, காபாளிகம், காளாமுக கொள்கைகளில் கரைந்தது. இதன் தொடர்ச்சியே தமிழகத்தில் கிடைக்கும் பள்ளிப்படைகோவில்கள். அவ்வகையில் பள்ளிப்படை கோவில்களில் மடம் அமைத்து அதனை நிர்வகிக்கும் பொறுப்பினை லகுலீச பண்டிதர்களே ஏற்றனர். இதனை பெரியபுராணம் வாயிலாகவும், கல்வெட்டுகள் வாயிலாகவும் அறியலாம்.


சிற்பங்களில் லகுலீசர்:


லகுலீசர் சிற்பங்கள் குறித்து யு.பி.ஷா, தெபல மித்ரா எனும் இரு அறிஞர்கள் ஆராய்ச்சி கட்டுரைகள் வெளியிட்டுள்ளனர். அதன்படி லகுலீசரின் முடியமைப்பு சிரஸ்திரகம் எனும் சுருள் வடிவ முடியமைப்பும், தர்மசக்கர பிரவர்த்தன முறையில் கைகளும், லகுடம் எனும் தடி மார்பில் சாய்ந்த நிலையில் இருக்கும், அவரின் ஆண்குறி மேல்நோக்கி நிமிர்ந்த நிலையில் காட்டப்பட்டிருக்கும். பெரும்பாலும் நிர்வாண நிலையிலேயே இருப்பார். வெகுசில இடங்களில் கோவண ஆடையை மட்டும் அணிந்திருப்பார். மிகச்சில சிற்பங்களில் லகுடத்தை சுற்றி பாம்பு அமைந்திருக்கும்,  பத்மாசனம், யோகாசனம், அர்த்தபத்மாசனம் போன்ற ஆசனங்களில் அமர்ந்திருப்பார். நின்ற கோலமும் உண்டு. 

இத்தகைய சிற்பங்கள் ஒரிசாவில் மிகுதியாகவும், ஆந்திர, கர்நாடக பகுதிகளில் சிலவும் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.


 தமிழகத்தில் லகுலீசர் சிற்பங்கள் என அடையாளப்படுத்தப்படும் தேவர்மலை, திருக்கோவிலூர், அரிட்டாப்பட்டி சிற்பங்கள் இத்தகைய அடையாளங்கள் ஏதுமின்றி காணப்படுவது விந்தையான ஒன்று!  இவை நம் மரபிற்கென உள்ள தனித்த உருவங்களா? அல்லது சண்டேசுவரரா? வாயிற்காப்பாளரா! அரசரா? என விவாதம் நடந்துகொண்டேயுள்ளது








தேவர் மலை 

அரிடாபட்டி 

திரு கோவிலூர் 
கர்நாடகம் 


Comments

Popular posts from this blog

அடிமுடிகாணா அண்ணல்-16

பைரவ வடிவம்-25

சதாசிவ வடிவம்-11