காமதகன மூர்த்தி-13

 காமதகன மூர்த்தி-13


தக்கனின் யாகத்தினை தகர்த்தபின், கயிலைமலையில் சிவனும் உமையும் எழுந்தருளியிருக்கும்போது, சிவனிடம் உமை "முன்புநான் தக்கனுக்கு மகளாய் பிறந்து தாட்சாயினி எனும் பெயர் பெற்றேன். தங்களை இகழ்ந்த தக்கனின் மகள் என்ற பெயரினையும், உடலையும் நான் விரும்பவில்லை, அவை நீங்குமாறு அருள்புரியுங்கள்" என வேண்டினார். அதற்கு ஈசன் "இமவான் எனும் மலையரசன் உன்னை மகளாய் பெற தவம்புரிகிறான். அவர் வேண்டுகோளை நிறைவேற்றுவாயாக!" என பணித்தார். 

ஈசனின் வேண்டுகோளையேற்று பொய்கை ஒன்றின்மேல் தாமரைமலரில் குழந்தையாய் தோன்றினாள் உமை. அக்குழந்தையை கண்ட இமவான், அக்குழந்தைக்கு "பார்வதி" என பெயரிட்டு சீரும் சிறப்புமாய் வளர்த்தார். பருவம் வந்ததும் ஈசனை மணக்க கடுந்தவம் புரிந்து வந்தார். அம்பிகையை பிரிந்த ஈசன், தெட்சினாமூர்த்தியாய் அமர்ந்து சனகாதி முனிவர்கட்கு அறம், பொருள், இன்பம், வீடு பற்றி சொல்லாமல் சொல்லும் குருமூர்த்தியாய் எழுந்தருளியிருந்தார். இந்நிலையில் சூரபதுமன், சிங்கமுகன், தாரகன் முதலிய அசுரர்கள் வானவர்களை துன்புறுத்தினர்.

இவர்களின் கொட்டத்தை அடக்க, ஈசனின் தவநிலையை கலைக்கவேண்டும். என நினைத்து உயிர்உருவாக, மனதில் காமத்தினை எழச்செய்யும் காமத்தின் கடவுளான மன்தனை அனுப்ப முடிவெடுத்தனர். முதலில் மன்மதன் மறுத்தான். ஆனால் பிரம்மனின் சாபம் இதனால் உண்டாகும்  என யோசித்தான். பிரம்மனின் சாபத்தால் துன்பபடுவதைவிட பரம்பொருள் ஈசனின் கோபத்தால் சாவதே மேல் என எண்ணி, கிளியை ஊர்தியாய் கொண்டு, தென்றல் தேர்ஏறி மீன்கொடி ஏந்தி கரும்புவில் ஏந்தி புறப்பட்டான் மன்மதன். முன்வாசலில் நந்தியம்பெருமான் இருப்பதை எண்ணி புறவாசல் வழி உட்புகுந்தான். அவனது மனைவியான ரதிதேவி தடுத்தாள். ஆனால் அதை பொருட்படுத்தாது, மனதை ஒருவாறு திடப்படுத்தி நறுமணம் பொருந்திய மலரம்புகளை எய்தான். ஈசனின் மேல்பட்டது அந்த அம்பு. கோவம் தலைக்கேற நெற்றிக்கண்ணை திறந்தார் பரம்பொருள்! நொடிப்பொழுதில் சாம்பலானான் மன்மதன். ரதிதேவி அரற்றினாள், பரம்பொருளை சரணடைந்து தன் மனாளனுக்கு உயிர்ப்பிச்சை கேட்டாள். இரக்கமடைந்த ஈசன். அவன் அருவமாகவே இருப்பான். அவனுக்கு உருவம் இனி கிடையாது. உன் கண்ணிற்கு மட்டுமே தெரிவான் என அருள்புரிந்தார். அதுமுதல் மன்மதன் "உருவிலான்","அனங்கன்" என பெயர் பெற்றான். ஈசது இக்கோலமே "காமதகனமூர்த்தி" எனப்பட்டது.


இலக்கியத்தில் காமதகனர்:


"காமனாருடல் கெடக் காய்ந்த எம் கண்ணுதல்"


"கரும்புவில்லியை பொடிபட விழித்தவர்"


"காய்ந்ததுவும் அன்று காமனை நெற்றிக் கண்ணினால்"


"ஐவனமாம் பகழியுடை அடல்மதனன் பொடியாகச் செவ்வணமாம் திருநயனம் விழிசெய்த சிவமூர்த்தி"


என திருமுறைகளில் சிவனாரின் இக்கோலம் குறித்து பாடப்பட்டுள்ளது.


இன்றும் கிராமிய விழாக்களில் காமன்பண்டிகை கொண்டாடப்பட்டு வரப்படுகிறது. 


கணம் எனப்பட்ட குழுச் சமூக அமைப்பிலிருந்து முன்னேறிக் கணவன், மனைவி, வாரிசுகள் என்ற ஒரு தொகுதியை - அதாவது - குடும்பத்தை அடிப்படை அலகாகக் கொண்ட சமூக அமைப்பை நோக்கித் தமிழ்ச் சமூகம் நடைபோட்ட வரலாற்றின் எச்சங்கள் இலக்கியங்களில் பதிவாகியுள்ளன. இப்பதிவுகளெல்லாம் சம காலப் பதிவுகளாக இருக்கவேண்டுமென்ற கட்டாயமில்லை. தங்களுடைய சமூகத்தின் முந்து வடிவத்திலிருந்து எஞ்சி நிற்கும் சில கூறுகள் திரிந்த வடிவிலாகிலும் நீடித்து வருகின்ற ஒரு நிகழ்வின் பதிவாகவும் அது இருக்க முடியும். அப்படிப் பார்க்கும்போது, அகநானூற்றில் ”பங்குனி முயக்கம்”, “கொங்கர் மணி அரையாத்து மறுகின் ஆடும் உள்ளி விழவு” (பா 368) என்றும், கலித்தொகையில் ”மல்கிய துருத்தியுள் மகிழ் துணைப் புணர்ந்து... விளையாடும் வில்லவன் விழவு” (35:13-14) என்றும் குறிப்பிடப்படுகின்ற காமன் பண்டிகையே சங்ககாலக் காதலர் தினம் எனத் தெரியவருகிறது.


கலித்தொகையில் இடம்பெற்றுள்ள வேறொரு பாடலில் (27:24-26) ”நாம் இல்லாப் புலம்பாயின் நடுக்கம் செய் பொழுதாயின் காமவேள் விழவாயின் கலங்குவள் பெரிதென ஏமுறுகடுந்திண்டேர்கடவி நாம் அமர் காதலர் துணை தந்தார் விரைந்தே” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. தம்மை நன்கு அலங்கரித்துக்கொண்ட பெண்டிர் குழுக்களாகக் கூடி வையையாற்றின் மணல் திட்டுகளில் விளையாடுவர் என்ற குறிப்பும் இப்பாடலில் (வரி 19-20) இடம்பெற்றுள்ளது. இது பங்குனி மாதம் உத்தர பால்குன நட்சத்திர நாளில் நிகழ்ந்தது. பங்குனி என்ற மாதப் பெயரே பால்குனி என்ற பெயரின் திரிபாகும். பனிக்காலத்தின் இறுதிக் கட்டத்தைக் குறிப்பதாகவும், இளவேனில் பருவத்தை வரவேற்கின்ற முன்னறிவிப்பாகவும் இந்நாள் திகழ்ந்தது.


அகநானூற்றில் “கொங்கர் மணி அரையாத்து மறுகின் ஆடும் உள்ளி விழவு” என்று குறிப்பிடப்பட்டுள்ளதைக் கண்டோம். கொங்கு நாட்டில் இவ்விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது எனத் தெரிகிறது. இறையனார் களவியல் நூற்பா 16-17க்கான உரையில் ‘கருவூர் உள்ளிவிழாவே’ என்ற குறிப்பு காணப்படுகிறது. ஊளி விழவு என்பது பிரதியெடுப்போரால் உள்ளி விழவு என்று தவறாக எழுதப்பட்டிருக்கவும் வாய்ப்புண்டு. ஊளி என்ற சொல் பேரோசை என்ற பொருளில் நம்பிள்ளையின் ‘ஈடு’ முப்பத்தாறாயிரப்படி ஏழாம் பத்தில் (4:4) இடம்பெற்றுள்ளது.3 உளை, ஊளை என்ற சொல் வழக்குகளையும் இதனோடு தொடர்புபடுத்தலாம். சமஸ்கிருதத்தில் ஹுல ஹுலி என்ற சொல் மகளிர் மகிழ்ச்சியில் எழுப்பும் பொருளற்ற ஓசை எனப் பொருள்படும்.4 இந்த அடிப்படையிலேயே காமன் பண்டிகை என்பது வட இந்தியாவில் ஹோலகா ஹோலிகா என்றும் ஹூளா ஹூளி என்றும் அழைக்கப்பட்டது. இவ்விழா நாளில் ஆடவரும் பெண்டிரும், குறிப்பாக இளைஞர்கள் ஒருவர் மேல் ஒருவர் சாய நீரைத் தெளித்துக்கொண்டும், சாயப் பொடிகளை தூவிக்கொண்டும், மதுபானம் அருந்தி ஊளையிட்டுக்கொண்டும் குதித்துக்கொண்டும் சில வேளைகளில் இருபொருள்படும் கொச்சையான பாடல்களைப் பாடிக்கொண்டும் திரிவர். இதுவே தற்போது ஹோலி என்று வழங்கப்படுகிறது. கொங்கு நாட்டில் ஒலி எழுப்புகின்ற மணிகளைக் கோத்து இடுப்பில் கட்டிக்கொண்டு நடுத்தெருக்களில் ஆடிப்பாடிக்கொண்டு இவ்விழாவைக் கொண்டாடினர். உறையூரிலும் (திருச்சிராப்பள்ளி) திருவரங்கத்திலும் ஆற்றின் இடையே இருந்த மணல் திட்டுகளில் ஆடவரும் பெண்டிரும் தததமக்கு விருப்பமான இணைகளுடன் சேர்ந்துகொண்டு கூடிக் களிப்பது சங்க இலக்கியத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும்,


களவு என்ற சொல்லே கள்ளத்தனமாக, பிறர் அறியாமல் மேற்கொள்ளப்படும் காதல் ஒழுக்கம் எனப் பொருள்படும். களவு மணமே தமிழ் நெறி என்று கூறும் அளவிற்குக் களவு மணத்திற்குச் சங்கப் புலவர்களிடையே குறிப்பிடத்தக்க அங்கீகாரம் கிட்டியிருந்தது. இந்நெறி காமன் வழிபாட்டோடு தொடர்புடையது என்பதற்குப் பிற்காலக் காப்பியமாகிய சீவகசிந்தாமணி அசைக்கமுடியாத சான்றாகத் திகழ்கிறது. சீவகனும் சுரமஞ்சரியாரும் காமன் கோட்டத்துக் கடியறை தன்னில் இரகசியமாகச் சந்தித்துக் கூடி மகிழ்ந்ததை ”இன்றமிழ் இயற்கை இன்பம்” நுகர்ந்தார்கள் எனச் சீவகசிந்தாமணி (பா. 2003,2055,2063) குறிப்பிடுகிறது.


சீவகசிந்தாமணி ஜைன சமயக் காப்பியம் என்பதாலும் சீவகன், சுரமஞ்சரி இருவருமே தமிழர்கள் அல்லர் என்பதாலும் இக்குறிப்பினை சொல்லுக்குச் சொல் அப்படியே பொருள்கொள்வது தவறு என்ற வாதம் எழக்கூடும். ஆனால், சிலப்பதிகாரத்தில் இடம்பெற்றுள்ள ஒரு குறிப்பு காமவேள் கோட்டம் தமிழகத்தில் பிரபலமாக இருந்துள்ளது என்பதற்குச் சான்றாகத் திகழ்கிறது.

காமனுக்கு அனங்கன் என்றும் பெயருண்டு. சிவன் தவம் செய்துகொண்டிருந்தபோது, அத்தவத்தைக் கலைப்பதற்காகச் சிவன்மீது காதல் உணர்வுகளை ஏற்படுத்தும் கணைகளை மன்மதன் தொடுத்தமையால் தவம் கலைந்த சிவனுடைய நெற்றிக்கண்ணின் கதிர்வீச்சுக்குக் காமன் பலியானான். அதனால் அவனுக்கு அங்கம் (உடல்) இல்லாதவன் என்று பெயர் வந்ததாக விளக்கம் கூறப்படுகிறது. காளிதாசனின் குமாரசம்பவம் இந்த விளக்கத்திற்கு ஆதாரமாக அமைந்துள்ளது11. தமிழ் இலக்கியங்களில் உருவிலி என்ற பெயரால் மன்மதன் குறிப்பிடப்பட்டுள்ளான். காதல் உணர்வு என்பது எவ்வாறு இருபாலார் மனதிலும் விதைக்கப்பட்டு வேர்பிடித்து வளர்கிறது என்பது எளிதில் கணித்துச் சொல்லமுடியாத ஒன்றாக இருப்பதாலும் இத்தகைய உணர்வுக்குக் காரணமான தெய்வத் தத்துவத்தை உருவிலி என்றும் அனங்கன் என்றும் குறிப்பிட்டிருக்கக்கூடும்.

(காமவேள் பண்டிகை தகவல்: 

நன்றி இராமச்சந்திரன் Sir)







Comments

Popular posts from this blog

அடிமுடிகாணா அண்ணல்-16

பைரவ வடிவம்-25

சதாசிவ வடிவம்-11