லிங்கத்திருமேனி-15

 லிங்கத்திருமேனி-15


சிவவழிபாட்டின் தொன்மையான வடிவம் லிங்கத்திருமேனியாகும். உருவம், கை,கால் முதலிய உறுப்புகள் எதுவுமின்றி, உருவமற்ற மேனியாதலால், "அருவத்திருமேனி" எனவும் "சதாசிவ திருமேனி" எனவும் அழைக்கப்படுகிறது. தேவர்கள் செல்வத்தை அடையும் பொருட்டு மகாலிங்க மூர்த்தியை வழிபட்டனர் என ரிக்வேதம்(5:313) கூறுகிறது. 



கந்து வழிபாடு:


சங்க இலக்கியம் காட்டும் கந்து வழிபாட்டின் நீட்சியே லிங்கவழிபாடு என்பது கோ.சுப்ரமணியபிள்ளை முதலானோர் கருதுகின்றனர். சங்க இலக்கியத்தில் நிறைய இடங்களில் கந்துவழிபாடு பிரதானமாய் இருந்துள்ளது.


"கழிகெழு கடவுள் கந்தம் கைவிட"(புறம்)

"புற்றுடைச் சுவர புதல்இவர் பொதியில்

கடவுள் போகிய கருந்தாட் கந்தம்"(அகம்)


போன்ற சங்க இலக்கியபாடல்கள் வாயிலாக கந்துவழிபாடு அன்று பிரதானமாய் இருந்ததை அறியலாம். கந்து என்பது மரமாகும். அன்று மரத்தில் தெய்வம் உறைவதாய் தமிழர்கள் நம்பினர். மன்னர்கள் தாம்வெற்றி பெற்ற நாட்டிலிருந்து கொணர்ந்து வந்த பகைவர்மகளிரை கந்துவழிபாட்டிற்கு பணிவிடை செய்ய நியமித்தனர். அவர்கள் கந்துவினை நீரால் கழுவி, நறுமணபொடிகளை தூவி, மாலையிட்டு நந்தாவிளக்கு ஏற்றி வழிபட்டதற்கு சான்றுகள் உண்டு. மொகஞ்சாதாரோவில் கிடைத்த உருவம் ஒன்றில் (Figure 18,plate 12) மரத்தடியில் கடவுளர் ஒருவரின் உருவமும், அவரை முழங்காலிட்டு வணங்கும் மற்றொருவரின் தோற்றமும் காணப்படுவது குறிப்பிடத்தக்கது. இன்றும் நிறைய சிவாலயங்களில் தலமரங்கள் காணப்படுவது கவனிக்கத்தக்கது.


 நடுகல் வழிபாட்டின் கூறுகளில் ஒன்றான குத்துக்கல் அல்லது நெடுங்கல்லிருந்து கூட லிங்கத்திருமேனி வழிபாடு தோன்றியிருக்க வேண்டும், அதன் தொடர்ச்சியாய் பள்ளிப்படை லிங்கங்கள், வாயிலாக லிங்கவழிபாடு தோன்றியிருக்ககூடும் என்ற கருத்தும் பரவலாக உள்ளது. எவ்வாறாகினும் சிவபெருமானின் வடிவங்களில் ஒன்றாக லிங்கத்திருமேனி நிலைத்துவிட்டது.


லிங்க அமைப்பு:


லிங்கம் மற்றும் ஆவுடையாரின் தோற்றத்தினை வைத்து அது பாலுறுப்பின் அடையாளம், என்ற தவறான கற்பிதம் நீண்ட நாட்களாகவே கற்பிக்கப்பட்டு வருகின்றது. ஐரோப்பிய பேராசிரியர். H.H.வில்சன் என்பவர் முதன்முதலாய் பாலுருப்பின் அடையாளமாய் லிங்கத்தின் தோற்றமுள்ளது என்ற கருத்தினை வெளிப்படுத்தினார்.ஜெர்மன் பேராசிரியர்.  குஸ்ரவ் ஒப்பர்ட் என்பவரும் இந்த கருத்தினையே கூறினார். இதனை சுவாமி.விவேகானந்தர் மறுத்து அறிக்கை வெளியிட்டார். ஆகம வழிபாட்டின்படி லிங்கத்தின் முகப்பு என்பது இறைவனின் முகம் என கூறுகிறது. கண்ணப்பநாயனாரிற்கு பொருட்டு லிங்கத்தில் கண்கள் தோன்றுகிறது, என்கிறது புராணம்! பின் எவ்வாறு லிங்கத்தினை  பாலுறுப்பாய் கொள்ள இயலும்? லிங்கமானது மூன்று கூறுகளை கொண்டது.நாற்கோண வடிவில் இருக்கும் அடிப்பகுதி பிரம்மபாகம் என்றும், இடையிலிருக்கும் எண்கோண பகுதி விஷ்ணு என்றும், வட்டவடிவ மேற்பகுதி சிவபாகம் என்றும் கூறுவர்.


இலக்கியத்தில் சிவலிங்கம்:


முத்துடன் மாணிக்கம் மொய்த்த பவளமும்

கொத்தும்அக்கொம்பு சிலைநீறு கோமளம்

அத்தன்தன் ஆகமம் அன்னம் அரிசியாம்

உய்த்ததின் சாதனம் பூமண லிங்கமே.


என திருமூலர் லிச்கத்தினை முத்து, மாணிக்கம், பவளம், மரம், கற்கள், திருநீறு, கொண்டு லிங்கம் செய்யலாம் என கூறுகிறார். இன்னும் பலபாடல்களில் லிங்கத்திருமேனி குறித்து பாடியுள்ளார்.


 லிங்கங்கள் வகைகள்:

 லிங்கம் பொதுவாய் அசையும் (சலம்), அசையா(அசம்) அசையும், அசையா(சலாசலம்) என பொதுவாய் வகைபடுத்தப்படுகின்றது! காசியப சிற்பநூல் திராவிடம், நாகரம், வேசரம் என மூன்று வகையாய் லிங்கத்தினை பிரிக்கிறது.மேலும் சிவாதிகம், சுவத்திகம், சர்வதோபத்திரம், சார்வ தேசிகம், தாராலிங்கம், முகலிங்கம்,சர்வலிங்கம், வர்த்தமாநம் என எட்டு வகைகளையும் கூறுகிறது.இவற்றுள் தாராலிங்கம் என்து நுனிமுதல் அடிவரை பட்டையால் ஆனது! சகஸ்கரலிங்கம் என ஒருவகை லிங்கம் உண்டு, பாகங்களில் முறையே ஒன்றைவிட மற்றொன்று இரட்டிப்பாக அமைக்கவேண்டும், ஒரு லிங்கத்தில் 25 படைகள் தீட்டி 40 சிறு லிங்கங்கள் அமைக்க அது ஆயிரம் லிங்கங்கள் ஆகிறது, இதனை சகஸ்கர லிங்கம் என்பர்.

 பூஜித்தபின் விட்டுவிடுவதை "கணலிங்கம்" என்பர். மண், அரிசி, பசுஞ்சாணம், வெண்ணெய்,சந்தனம் முதலியவற்றில் லிங்கம் பிடித்து, வேண்டி முடித்ததும் கலைத்துவிடுவர். சில லிங்க வடிவங்கள் இயற்கையாகவே புற்றுமண்ணில் தோன்றும். அந்த புற்றைச்சுற்றிலும் கருங்கல்லால் ஓர் அமைப்பு செய்து, புற்றுமண் சிதைவுறாமல் வழிடுவர்.  திருவாரூர் புற்றிடங்கொண்டார்(வன்மீகநாதர்), திருவையாறு (ஐயாரப்பர்) முதலியோர் திருமேனி புற்றுமண்ணே.


நந்திபுர,நியமத்து :


ஆயிரத்தளி, ஆயிரம் சிவலிங்கங்கள் உள்ள கோவில் என கூறலாம். நம் தமிழகத்தில் இரு ஊர்களை மட்டும் ஆயிரத்தளி என பல கல்வெட்டுகளில் கூறப்பட்டுள்ளது.

ஒன்று நியமத்து ஆயிரத்தளி, மற்றொன்று நந்திபுரத்து ஆயிரத்தளி(இன்றைய கண்டியூர், வீரசிங்கம்பேட்டை பகுதி),


'ஆடகப்புரிசை நந்திபுரத்து ஆயிரத்தளி'  என சிறப்பித்து கூறப்படும், நந்திவர்மபல்லவனால் நிர்மானிக்கப்பட்ட இந்நகரிலும், அவர்களின் சிற்றரசர்களான முத்தரையர்களின் தலைநகரான நியமத்திலும் இவ்வகை வழிபாடு இருந்துள்ளது.ஆயிரம் லிங்கங்களை நிர்மாணித்து வணங்கும் வழக்கம் இவ்விரு ஊர்களில் இருந்துள்ளது. இன்றும் அவ்வூர்களை சுற்றி ஆங்காங்கு நிறைய எண்ணிக்கையில் பாணலிங்கங்கள் கிடைக்கின்றன.


இச்சிற்பங்கள் பொதுவாக ஐந்தரை அடி உயரம் குறையாமல் இருக்கும்.இறைவன் தாமரைபீடத்தில் சுகாசனகோலத்தில் அமர்ந்திருப்பார்.நான்கு தலைகளுடன் நாற்கரங்களுடன் கம்பீர கோலத்திலிருப்பார்.நான்கு முகங்களிலும் நெற்றிக்கண் இருக்கும்.


சிவனை சதாசிவமூர்த்தமாக வழிபடுவது ஒருநெறி.பல்லவர்களும் சோழர்களும் சதாசிவ வடிவத்தை பல்வேறு விதங்களில் வடித்துள்ளனர். இரண்டாம் நந்திவர்மனின் உதயேந்திரம் செப்பேடும் சதாசிவ வணக்கம் கூறித்தான் ஆரம்பிக்கிறது.எனவே பெரும்பாலும் இச்சதாசிவ வழிபாடு நான்முகனாகவே வடிக்கப்பெறும்.


மாணிக்கவாசகர், சதுரனாகிய வாகீசரை 'தாமரைச்சைவனாக' காட்டுகிறார்.தேவாரம், திருவாசகத்திலும், அஜிதாகாமம், காரணாகாமம் போன்ற ஆகமநூல்களிலும் வாகிசர் குறிக்கப்படுகிறார்.


தற்பொழுது இவ்விரண்டு ஆயிரத்தளி நகரங்களும் காலப்போக்கில் அழிந்துவிட்டது. இந்த இரு ஊர்களிலும் கொஞ்சம் அலசினால் நிறைய லிங்கங்கள் வயல்பகுதிகளிலும், சாலையோறங்களிலும் காட்சியளிக்கும்.

காலப்போக்கில் இவ்வாறு லிங்கம் எடுக்கும் வழக்கம் அழிந்துவிட்டது. 


சிவலிங்க உயர அளவுகள், தத்துவங்கள் குறித்து நிறைய ஆகமங்கள் உள்ளன. மயமதம், காஸ்யபசில்பசாஸ்த்ரம், காமிகாமகம், சிவபராக்கிரமம், சிவவடிவங்கள் போன்ற நூல்கள் இவற்றை விரிவாக பேசுகின்றன.














Comments

Popular posts from this blog

அடிமுடிகாணா அண்ணல்-16

பைரவ வடிவம்-25

சதாசிவ வடிவம்-11