கயாசுர வத வடிவம்

 கயாசுர வத வடிவம்:


நான்முகனிடம் இறப்பில்லாத ஆயுளும், வெற்றியும் பெறவேண்டி தவம் புரிந்தான் யானைஉரு கொண்ட கயாசுரன் எனும் அரசன். அவன் தவத்தில் மெச்சிய பிரம்மன், யாது வேண்டும் என கேட்க, "நீடித்த ஆயுளுடன், எல்லோரையும் வெற்றிகொள்ள வேண்டும்",என கேட்க, அவனது வரத்தின் உட்பொருளை உணர்ந்த பிரம்மன் "அப்படியே ஆகட்டும் கயாசுரா! நீ வேண்டும் வரம் அளித்தோம்!  ஆனால் நீ பரம்பொருள் ஈசனை எதிர்த்தால், நீ பெற்ற பேரு அழியும்! என கூறி மறைந்தார். 

வரத்தின் மேன்மையால், பலசக்திகளை பெற்ற கயாசுரன், இந்திரலோகத்தவரை துன்புறுத்த தொடங்கினான், இந்திரனின் வாகனமான ஐராவதத்தின் வாலைபிடித்து  வீசியடித்தான், எண்திசை காவலர்களை போரிட்டு வென்றான்.கயாசுரனுக்கு அஞ்சிய தேவர்கள், காசிக்கு சென்று பரம்பொருளை நோக்கி வேண்டினர்,


"அஞ்சேல்! அஞ்சேல்"என இறைவனும் அருள்புரிந்தார்.தேவர்கள் ஈசனிடம் சென்றதையறிந்த கயாசுரன், தான் பெற்ற வரத்தின் தன்மையை மறந்து, கர்வம் கொண்டு, பரமனின் ஆலயத்திருவாயிலை அடைந்தான். அங்குவந்து இடிபோல முழங்கினான்.ஆடிப்போன தஞ்சம் அடைந்தவர்களை சமாதானப்படுத்தினார் ஈசன்.அதற்குள் ஈசன்முன் பிரம்மாண்டமாய் வந்து நின்றான் கயாசுரன். கடுஞ்சினம் கொண்டார் நம் பரம்பொருள். தம் திருவடியால் கயாசுரனை உதைத்து தள்ளி, யானை வடிவேற்ற அவன் தோலை பிய்த்து உரித்தார் ஈசர்.


கயாசுர வதம் காசியில் நடந்ததெனவும், இதனால் அங்குள்ள இலிங்கத்திருமேனி ஒன்றிற்கு, "கீர்த்திவாசேசுவர்" எனவும் பெயர் ஏற்ப்பட்டது.



"மதித்து வேழமாந் தானவன் வருதலும் வடவை

உதித்த வன்னியும் அச்சுற வெரிவிழித்தொருதன்

கதித்த தாள்கொடு தள்ளவே கயாசுரன் கவிழ்ந்து

பதைத்து வீழ்தலும் மிதித்தனன் சிரத்தையோர் பதத்தால்



ஒரு பதத்தினைக் கவானுறு திருக்கரத் துகிரால்

வெரி நிடைப் பிளந் தீரிரு தாள்புடை மேவக்

குருதி கக்கியே யோலிட அவுணர்தங் குலத்துக்

கரியுரித்தனன் கண்டு நின்றம்மையுங் கலங்க


ஐயன் மிக்கதன் கதிரினைக் குருதிநீரறாத

மையல் யானைவன் றோலைமேற் கொண்டனன் மறைத்தான்

செய்ய கோளொடு கரியகோ ளிருவருஞ் செறிந்து

வெய்ய பானுவி னடுவுறக் கவர்ந்து மேவிய போல்"


என கந்தபுராணம் இந்நிகழ்வை கூறுகிறது.

ஈசனுடைய எட்டுப் பராக்கிரமச் செயல்களுள் ஒன்றாக அவர் யானை உரித்த வரலாறு பேசப்படுகின்றது. ஈசனது இக்கோலம் பலகோவில்களில் குறுஞ்சிற்பமாகவும், கோட்டசிற்பமாகவும், உலோகச்சிற்பமாகவும் உள்ளது.










Comments

  1. தஞ்சாவூர் கலைக்கூடத்தில் பார்த்துள்ளேன்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

அடிமுடிகாணா அண்ணல்-16

பைரவ வடிவம்-25

சதாசிவ வடிவம்-11