காலனுக்கு காலன் கோலம்

 காலனுக்கு காலன் கோலம்:


கௌசிக முனிவரின் புதல்வரான மிருகண்டு முனிவர் தன் மனைவியான மிருத்துவதியோடு மணல்மேடு (திருக்கடவூர் அருகே) வாழ்ந்து வந்தார். நீண்டநாட்களாய் இந்த தம்பதியினருக்கு மகப்பேறு இல்லாததால், ஈசனை நோக்கி மனமுறுகி வேண்டினர். மனம்இரங்கிய ஈசன், மிருகண்டு முனிவரிடம் தோன்றி, "நீண்ட ஆயுளும், குறைந்த அறிவும் கொண்ட மகன் வேண்டுமா? அல்லது "நிறைந்த அறிவும் குறைந்த ஆயுளும் கொண்ட மகன் வேண்டுமா? என கேட்க,


குறைந்த ஆயுள் கொண்டவனாய் இருந்தாலும் பரவாயில்லை, நிறைந்த அறிவுடையவனே வேண்டும் என கேட்கிறார், மிருகண்டர். ஈசனும் வரத்தை தந்து மறைகிறார்.


ஈசன் வரம் தந்துபெற்ற மகனுக்கு "மார்க்கண்டேயன்" என பெயரிட்டு அத்தம்பதியினர் சிறப்புற வளர்த்து வந்தனர். பதினாறு வயது நிரம்பியதும், தன் ஆயுளின் குறையை அறிகினான் மார்க்கண்டேயன். காலம் நெருங்க காலனும் வருகிறான். உடனே அருகேயுள்ள திருக்கடவூர் ஈசனை நோக்கி விரைந்து, அச்சம் காரணமாய் லிங்கத்திருமேனியை கட்டியனைத்தான். ஈசனைச் சரணடைந்தால் என்ன? என்கடமையை குறைவில்லாமல் செய்வேன், என தன் பாசக்கயிற்றை வீச, அது லிங்கத்திருமேனியையும் சேர்த்து இணைக்க, விடாது தன்னை நோக்கி இழுத்தான் காலன். வெகுண்டெழுந்த ஈசன், காலனை தன் காலில் போட்டு மிதித்து "காலனுக்கு காலன்" எனும் காலசம்ஹாரமூர்த்தி உருவெடுத்து, என்றும் பதினாறு வயதுடன் விளங்க மார்க்கண்டேயனுக்கு அருள்புரிந்தார்.


முதன்முதலாய் காரைக்கால் அம்மையார், தமது மூத்த திருப்பதிகத்தில், இத்திரு அவதாரம் குறித்து பாடுகிறார்.

"கூற்றுருவம் காய்ந்தனை" என குறிப்பிடுகிறார்.


"சேலின் நேரனைய கண்ணார் திறம்விட்டு சிவனுக்கன்பாய்ப்

பாலும் நல்தயிர் நெய்யோடு பலபல ஆட்டியென்றும்

மாலினைத் தவிர நின்ற மார்க்கண்டற்காக அன்று

காலனை உதைப்பர் போலும் கடவூர் வீரட்டனீரே"


என நாவுக்கரயரும்


"வரும்காலன் உயிர்மடிய திருமெல்விரலால்

பெரும்பாலன் தனக்காய் பிரிவித்த பெருந்தகையே"


என சுந்தரரும்,


"காலன் புகுந்தவியக் கழல் கால்வைத்து எழில்

தில்லை நின்ற மேலன்"


என திருவாதவூராரும் இக்கோலத்தினை திருமுறைகளில் பாடுகின்றனர்.


சிற்பங்களில் காலகாலர்:


நின்ற கோலத்தில் மழு, பாசம், தர்சனி தாங்கிக் கொண்டு தன் காலின் கீழே காலனை போட்டு வதைப்பதாய் இவ்வுருவம் பொதுவாய் சிற்பமாய் அமைக்கப்படுவதை ஆகமங்கள் கூறுகிறது.








Comments

Popular posts from this blog

பைரவ வடிவம்-25

கங்காள மூர்த்தியும் திரிவிக்ரமரும்

அடிமுடிகாணா அண்ணல்-16