சதாசிவ வடிவம்-11
சதாசிவ வடிவம்-11
சிவஆகமங்களை உபதேசிக்கும் பொருட்டு ஈசன் அருளிய வடிவமே சதாசிவ வடிவம் ஆகும். இவ்வடிவில் ஈசருக்கு ஐந்து முகங்கள் இருக்கும். கிழக்கில் தத்புருடம், மேற்கில் சத்யோசாதம், வடக்கில் வாமதேவம், தெற்கில் அகோரம், உச்சியில் ஈசானம் என ஐந்து முகங்களாய் ஆகமங்கள் கூறுகிறது. இதில் ஈசான முகத்திலிருந்து 28 சைவஆகமங்களும், மற்ற முகத்திலிருந்து நான்மறைகளும் தோன்றின என்றும் இந்த 28 ஆகமங்களும் ஈசனின் உறுப்புகள் என போற்றப்படுகிறது! இந்த சதாசிவ மூர்த்தம் பெரும்பாலும் லிங்கவடிவாயினும், அல்லது வேறுவடிவாயினும் நான்முகத்துடனேயே வடிக்கப்பட்டிருக்கும்.
லிங்க உருவில் மட்டுமின்றி அரிதாக முழுஉடலாகவும் வடித்தும் வழிபட்டுள்ளனர்.
இந்த இறைவுருவை வாகீசர் என அஜிதாகமம்,காரணாகமும் குறிப்பிடுகின்றன.
வாகீச மூர்த்தி :
ஆயிரத்தளி என குறிப்பிடப்படும் 'நந்திபுரம்', நியமம் என ஊரில் மட்டுமே இவ்வகை சிலைகள் உள்ளது. அன்றைய நந்திபுரம் இன்றைய கண்டியூர் வீரசிங்கம்பேட்டை மற்றும் அருகேயுள்ள ஊர்களால் ஒருங்கிணைந்த பெருநகரமாய் அன்று இருந்துள்ளது. நியமம் கல்லனை -திருக்காட்டுப்பள்ளி இடையே இன்று சிற்றூராய் உள்ளது.
('ஆடகப்புரிசை நந்திபுரத்து ஆயிரத்தளி' என சிறப்பித்து கூறப்படும், நந்திவர்மபல்லவனால் நிர்மானிக்கப்பட்ட இந்நகரிலும், அவர்களின் சிற்றரசர்களான முத்தரையர்களின் தலைநகரான நியமத்திலும் இவ்வகை வழிபாடு இருந்துள்ளது.ஆயிரம் லிங்கங்களை நிர்மானித்து வணங்கும் வழக்கம் இவ்விரு ஊர்களில் இருந்துள்ளது. இன்றும் அவ்வூர்களை சுற்றி ஆங்காங்கு நிறைய எண்ணிக்கையில் பாணலிங்கங்கள் கிடைக்கின்றன.)
இச்சிற்பங்கள் பொதுவாக ஐந்தரை அடி உயரம் குறையாமல் இருக்கும்.இறைவன் தாமரைபீடத்தில் சுகாசனகோலத்தில் அமர்ந்திருப்பார்.நான்கு தலைகளுடன் நாற்கரங்களுடன் கம்பீர கோலத்திலிருப்பார்.நான்கு முகங்களிலும் நெற்றிக்கண் இருக்கும்.
சிவனை சதாசிவமூர்த்தமாக வழிபடும் நெறியானது பல்லவர்கள், சோழர்கள் காலத்தில் செழித்திருந்தது. சதாசிவ வடிவத்தை இவர்கள் பல்வேறு விதங்களில் வடித்துள்ளனர். இரண்டாம் நந்திவர்மனின் உதயேந்திரம் செப்பேடும் சதாசிவ வணக்கம் கூறித்தான்ஆரம்பிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.எனவே பெரும்பாலும் இச்சதாசிவ வழிபாடு நான்முகனாகவே வடிக்கப்பெறும்.
மாணிக்கவாசகர், சதுரனாகிய வாகீசரை 'தாமரைச்சைவனாக' காட்டுகிறார்.தேவாரம், திருவாசகத்திலும், அஜிதாகாமம், காரணாகாமம் போன்ற ஆகமநூல்களிலும் வாகிசர் குறிக்கப்படுகிறார்.
இவ்வறிய சிற்பம் இன்று பிரம்மனாக கண்டியூரிலும், செந்தலையிலும் வணங்கப்படுகிறார். திருச்சிமாவட்டம் திருப்பட்டூரில் இன்று பிரம்மனாய் வணங்கப்படுபவர் கூட "சதாசிவ மூர்த்தி"யே எனும் கருத்துள்ளது.
Wowwwww factors... Wonders....
ReplyDeleteசெந்தலையில் பார்த்ததில்லை. இப்பதிவில் கூறப்பட்டுள்ளதைப் போல கண்டியூரிலும், திருப்பட்டூரிலும் இருப்பது பிரம்மனாக இருக்க வாய்ப்பு உள்ளது என்பது என் எண்ணம். இந்த இரு சிற்பங்களையும் பார்த்துள்ளேன்.
ReplyDelete