மாலொருபாகர்-17
மாலொருபாகர்-17
ஈசனை நோக்கி ஒருமுறை தவமியற்றினார் திருமால். அதனால் மகிழ்ந்த ஈசர், அனைவரையும் மயக்குகின்ற சக்தியை உமக்கு தந்தோம் என அருளினார்,"மேலும் எமக்கு இடப்பாகம் இருக்கும் வரத்தையும் தந்தோம்" என அருளினார். இவ்வடிவில் இருவரும் ஒரு கூறாய் உள்ளனர். சைவ-வைணவ இணைப்பு முயற்சியில் இவ்வடிவம் உருவாக்கப்பட்டிருக்கக்கூடும்,
சங்க இலக்கியத்திலேயே இவ்வடிவம் குறித்த குறிப்புள்ளது, அகநானூற்று 360 ம் பாடலில்,
"வெருவரு கடுந் திறல் இரு பெருந் தெய்வத்து
உரு உடன் இயைந்த தோற்றம் போல,
அந்தி வானமொடு கடல் அணி கொளாஅ,
வந்த மாலை பெயரின், மற்று இவள்
பெரும் புலம்பினளே தெய்ய"
ஒளியாகிய சிவனும், இருளாகிய திருமாலும் இணைந்து காட்சி தரும் தெய்வம் உருவம் ஒன்றாக இணைந்திருக்கும் தோற்றம் போல பகலும் இரவும் ஒன்றிணைந்து காணப்படும் அந்தி வானம் இது என்ற பொருளில் பாடப்பட்டுள்ளது. சங்ககாலம் முதலே இவ்வடிவத்தினை மக்கள் அறிந்திருந்தற்கு இது சான்றாகும்.
"தாழ்சடையும் நீண்முடியும் ஒண்மழுவும் சக்கரமும்,
சூழரவும் பொன்னாணும் தோன்றுமால்,- சூழும்
திரண்டருவி பாயும் திருமலைமேல் எந்தைக்கு,
இரண்டுருவு மொன்றாய் இசைந்து"
என பேயாழ்வாரும் இவ்வடிவம் குறித்து பாடியுள்ளார்.
அரிஅத்தர், அரிஅரர், மாலொருபாகர், கேசவார்த்தமூர்த்தி, சங்கரநாராயணர் என இவ்வுருவம் குறிப்பிடப்படுகிறது. வலப்புறம் சிவனாகவும், இடப்புறம் திருமால் உருவும் இச்சிலையில் ஆகமப்படி வடிக்கப்படும்.
சமயம் வளர்த்த ஆழ்வார்கள், நாயன்மார்களால் இவ்வுருவம் பற்றி பெரிதும் போற்றி பாடப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலம் சிமோகா அருகே "கூடலி" எனும் ஊரில் திருமாலின் வடிவாய் துங்காநதியும், ஈசனின் வடிவாய் கருதப்படும் "பத்ரா" நதியும் சங்கமித்து பெரும்பிராவகமாய் ஆர்ப்பரித்து பெருகுவது சிறப்பானது
.
அரிதாக காணப்படுகின்ற சிற்பத்தைப் பற்றிய அருமையான பதிவு.
ReplyDelete