ஊர்த்துவ தாண்டவர்-21
ஊர்த்துவ தாண்டவர்-21
சும்பன், நிசும்பன் எனும் இரு அசுரர்கள், உலக உயிர்களையும் தேவர்களையும் துன்புறுத்தி வந்தனர். இவர்களின் தீமையை பொறுக்க இயலா தேவர்கள், பார்வதிஅம்மையை நோக்கி கடுந்தவமியற்றி தம்மை காத்தருளுமாறு வேண்டினர். ஈசரின் அனுமதியை பெற்று, "அசுரர்களை அழிப்பேன்" என வெஞ்சினம் கொண்டு கிளம்பினார். தன்னை கொல்ல வரும் அம்மையின் பேரழகில் மதிமயங்கிய நிசும்பன் தன்னை மணந்து கொள்ளும்படி அம்மையிடம் தூதுஅனுப்பினான், நிசும்பனிடம் விளையாட எண்ணிய அம்மை, "என்னை எவர் போரில் வெல்கிறாரோ! அவரே எனை வெல்ல முடியும்" என மறு செய்தி அனுப்பினார். கடும்போர் மூண்டது. அனைத்து அசுரர்களையும் வெறிகொண்டு அழித்தாள் அம்மை. இறுதியாய் "ரத்தபீசன்" என ஒருவன் மட்டும் எஞ்சினான். அவன் உடலில் உதிரும் ஒவ்வொருதுளி உதிரத்திலும், ஒரு அசுரன் தோன்றிகொண்டேயிருந்தான். இவனை அழித்தாளொழிய போர் முற்றுபெறாது என எத்தனித்து தன் பிரதியான ஆக்ரோஷ காளியை வரவழைத்தார். ரத்தபீசனை பார்வதியம்மை கொள்ளும்போது, அவன் உடலில் வழியும் இரத்தத்தை குடித்து முடிக்குமாறு காளிக்கு ஆணையிட, காளியும் அம்மையின் கட்டளையை நிறைவேற்ற மடிந்தான் ரத்தபீசன். காளிக்கு இந்நிகழ்விற்கு பின் "சண்டி" எனும் பெயர் உருவாயிற்று. ஈசனின் அருகிலிருந்து நடனமாடும் பேற்றினை அம்மை அளித்தார் காளிக்கு. உமையம்மையிடம் வாங்கிய வரத்தாலும், ரத்தபீசனை அளித்த வெற்றியாலும், காளிக்கு செருக்கேறியது. அதே செருக்குடன் திருவாலங்காடு வந்தடைந்தார் காளி.அங்கேயும் ஆவேசம் குன்றாது அவ்வூராரை துன்புறுத்தினார், இச்செய்தி கார்கோடர், நாரதர் வாயிலாக ஈசனை சென்றடைந்தது! காளியின் ஆணவத்தை அடக்க, தம் பரிவார பூதகனங்களுடன் காளியை போருக்கு அழைத்தார். காளியின் படைகளை ஈசனின் பூதப்படைகள் அளித்தது. இறைவனை நடனபோருக்கு அழைத்தார் காளி. கடுமையாக நடந்த நடனப்போட்டியில் ஈசனின் காதிலிருந்த குண்டலமொன்று கீழேவிழ, அதனை தன் காலினாலே எடுத்து, காதில் மாட்டினார். காளியால் இத்தகைய நடத்தினை ஆட இயலவில்லை. நாணம் தலைக்கேற, வெட்கத்துடன் தோல்வியை ஒப்புகொண்டார் காளி. இவ்வாறோ காளியின் செருக்கை அடக்க ஈசன் ஆடிய நடனமே "சண்ட தாண்டவ வடிவம்" எனப்படுகிறது. இதுவே, "காளிகா தாண்டவ மூர்தி", "ஊர்த்துவ தாண்டவ மூர்த்தி" எனவும் அழைக்கப்படுகிறது.
"நதியதனயலே நகுதலைமாலை நாண்மதிசடைமிசை யணிந்து
கதியதுவாகக் காளிமுன்காணக் கானிடைநடஞ்செய்த கருத்தர்
விதியதுவழுவா வேதியர்வேள்வி செய்தவரோத்தொலி யோவாப்
பதியதுவாகப் பாவையுந்தாமும் பாம்புர நன்னகராரே"
"கொதியினால் வரு காளிதன் கோபங்
குறைய ஆடிய கூத்துடையானே"
என இறைவனின் இக்கோலத்தினை திருமுறை கூறுகிறது.
காரைக்கால் அம்மையார், தமது மூத்ததிருப்பதிகத்திலும்,
"குண்டின்ஓ மக்குழிச் சோற்றை வாங்கிக்
குறுநரி தின்ன, ‘அதனை முன்னே
கண்டிலம் என்று கனன்று பேய்கள்
கையடித்(து) ஓ(டு)இடு காட்ட ரங்கா
மண்டலம் நின்றங்(கு) உளாளம் இட்டு,
வாதித்து, வீசி எடுத்த பாதம்
அண்டம் உறநிமிர்த்(து) ஆடும் எங்கள்
அப்ப னிடம்திரு ஆலங் காடே."
பாடியுள்ளார்.
தலையில் புனல், தலைமாலை,பிறை ஆகியவற்றை சூடிக்கொண்டு கண்களில் அணல் ஏந்தி காளியின் செருக்கை அடக்க ஆடுவதாய் தேவாரம் இவ்வடிவ இறைவனை சுட்டுகிறது.
Comments
Post a Comment