சுரம் நீக்கும் இறைவன்:23
சுரம் நீக்கும் இறைவன்:23
மாபலிசக்ரவர்த்தியின் மகன் வாணாசுரன் சிறந்த சிவபக்தன், ஈசனை நோக்கி தவமியற்றி உலகம் முழுவதும் ஆளும் வல்லமையும், அக்கினையையே மதிலாய் கொண்ட அரண்மனையும் வரமாய் பெற்றான். உலகை ஆட்சி செய்தவன் மீண்டும் இறைவனிடம் தவமியற்றி, தம்முடைய மாளிகையில் விநாயகர், முருகன், உமை, ஈசன் தம் மாளிகையில் வீற்றிருக்குமாறு வேண்ட இறைவனும் அவ்வாறே தம் குடும்பத்துடன் வாணாசுரனது மாளிகையில் வீற்றிருந்தார். இறைவனே தம் வீட்டில் எழுந்தருளியிருந்ததால், மமதை அதிகமாகி உலகோரை அச்சுறுத்தினான்.தன்னை எதிர்க்க எவறும் இல்லாததால் செருக்கு மிகுதியாகி இறைவன் என்பதையே மறந்து ஈசனை போர்புரிய அழைத்தான். ஈசன் புன்னகைத்து, "உன்னோடு துவாரகை நாயகன் கண்ணன் போர்புரிவான்" என்றார். கண்ணன் என்னுடன் பலமுறை போரில் தோற்றோடியவர், அவரா எனக்கு ஈடு! என பதிலுறைத்தான் வாணாசுரன், அச்சமயம் வாணாசுரனின் மகள் உசை, கண்ணபிரானின் மகன் அநிருத்தன் தன்னோடு கனவில் உடலோடு கலந்ததாய், கனவு கண்டாள். அதன் பலனாய் அவள் கருவுற்றாள். இதனையறிந்த வாணாசுரன், அநிருத்தனை சிறையிலிட்டான். தன் மகனை மீட்க வெகுண்டெழுந்த கண்ணன் படையை திரட்டி வந்தான். அச்சமயம் வாணாசுரனது மாளிகையில் ஈசனின் குடும்பத்தவர் வீற்றிருக்க, அவர்களிடம் விழுந்து பணிந்தார் கண்ணன். அச்சமயம் ஈசர், எம்மை வெல்லாமல் வாணாசுரனை நீ வெல்ல இயலாது கண்ணா, என கூற, திகைத்தார் கண்ணன். கண்ணனை ஆற்றுப்படுத்திய ஈசர், நீ போரிடுது போல் விளையாட்டாய் போர்செய்! நான் பார்த்துகொள்கிறேன் என ஈசன் கூற,
கண்ணனும் முழுதிறனுடன் போர்புரிந்தார்,
அப்போது கண்ணன் ஈசன்மேல் குளிர்சுரத்தை ஏவ, ஈசன் அதனை கிரகித்து கண்ணன்மேல் வெம்மைசுரத்தை ஏவினார். இவ்வெம்மை சுரம் மூன்றுகைகள், மூன்று கால்கள், ஒன்பது விழிகளுடன் கண்ணனை நோக்கி சென்றது.
இறுதியில் ஈசனிடம் பணிந்து! இறைவரே! இதற்குமேல் உம்மிடம் நான் போர்புரிவது இயலா காரியம், என சரணடைந்தார். ஈசனும் போரிலிருந்து விலகினார். இறைவனது இக்கோலமே "சுரம் நீக்கும் பரமன்" கோலம் எனப்படுகிறது!
ஈசனார் கண்ணனிடம், வாணாசுரன் என்னிடம் பணிந்து வேண்டிய இருகரங்களை தவிர ஏனைய கரங்களை துண்டித்துவிடு! என கூறினார்.கண்ணனும் அவ்வாறே இருகரங்களை தவிர மற்றவைகளை பிய்த்து எறிந்தார். அப்போது ஈசன் வானாசுரனை பார்த்து, "உனது ஆணவமும் போர் வெறியும் அடங்கியதா!? " என வினவ, வானாசுரன் தன் தவறை உணர்ந்தான். ஈசன் அவனை மன்னித்து, இழந்தை கரங்களை மீண்டும் அளித்து, உசைக்கும், அநிருத்தனுக்கும் திருமணம் செய்து வைத்தார்.
இக்கோலத்தில் இறைவன் சிலை ஒருகாலைதூக்கி நடனமாடுவது போலவும், மற்ற இருகால்கள் நிலத்தில் ஊன்றுவதுபோலவும் அமைக்கப்படும், ஒன்பது விழிகள், மூன்று கை,கால்கள், இரு கரங்களில் ஒன்று அபய முத்திரையாகவவும் மற்றொன்று படைக்கலனை பிடித்தவாறும் அமைக்கப்படும். இவ்வடிவில் இறைவன் லிங்கவடிவிலும் அமைக்கப்படும். தமிழகத்தின் சில இடங்களில் ஜ்வரஹரேஸ்வரர் எனும் பெயரில் நிறைய ஈசர் உண்டு. புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலையில் ஒரு சுனைலிங்கம் காணப்படுகிறது. அங்கு காணப்படும் 1857 ம் ஆண்டு கல்வெட்டு அவ்வருடத்தின் மே மாதம் 14ஆம் நாளன்று புதுக்கோட்டை அரசர் ராஜா ராமச்சந்திர தொண்டைமான் அவர்கள் தன் இரண்டாம் மனைவியாகிய ஜானகி அம்மாளுடன் அங்கு சென்று தலவர சிங்கம் என்கிற சுனையில் உள்ள நீர் முழுவதையும் வெளியேற்றி தன் குலகுரு சிவராம ஸ்வாமி மூலம் அச்சுனையினுள் மூழ்கியிருந்த "ஜ்வரஹரேஸ்வரர்" என்கிற லிங்கப் பெருமானுக்கு வழிபாடு செய்தார் என்பது இக்கல்வெட்டு மூலம் அறிய முடிகிறது.
தீராத வெம்மைநோய் உடையவர்கள் இவ்வடிவ இறைவனை வேண்டினால் சுரம் நீங்கி அருள்பெறுவர் என்பது நம்பிக்கை.
சில கோயில்களில் ஜுரஹரேஸ்வரர் சிற்பங்களைப் பார்த்துள்ளேன். தற்போது பின்னணியினை அறிந்தேன். சிறப்பு.
ReplyDeleteநன்றி
ReplyDelete